வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

எங்கள் குலக்கொழுந்தே பாலச்சந்திரா

 

மதிவதனி ஈன்றெடுத்த மணிமுத்தே மரகதமே
எங்கள் அண்ணன் பெற்ற தவப்புதல்வா
மாசறு பொன்னே மண்ணின் மைந்தா 
எங்கள் குலதெய்வம் ஆனாயடா நீ

கரிகாலன் பெற்றெடுத்த கற்கண்டே
உன் திருக்கோலம் நாம் கண்டு
இரவு எல்லாம் தூங்கலையே
உன் பார்வை எங்கள் நெஞ்சத்தை
வேல் கொண்டே துளைக்குதடா

வாளாவிருந்து உன்னை உன் அண்ணை
உன் தமக்கை எல்லாம் இழந்தோமோ
என்றேவோர் குற்றவுணர்ச்சி எம்மைக் கொல்லுதடா

கதிர்க்கையன் ஈன்றதோர் ஒளிச்சுடரே 
என்றெம்மினம் விடுதலை பெறுமோ
என்றெண்ணி ஏக்கமுறப் பார்த்தாயோ

பக்கத்து தேசத்தில் பதினெட்டுக்கல் தொலைவில்
ஆறுகோடித் தமிழன் இருந்தும் 
இப்படி நாம் இன்னல்படுகிறோமே 
என்றெண்ணி வருந்தி மனம் நொந்தாயோ 

என்செய்வதடா எங்கள் செல்வமே 
உன் தந்தையைப் போலோர் மாவீரன் 
கொள்கைக் குன்றோர் தலைவன் 
ஈங்கிலையே எம்மை வழி நடத்தலையே

ஆனாலும் எங்கள் அண்ணனையே தலைவனாய்
எங்கள் மனங்களிலே வரித்துள்ளோம் வழிநடந்திடுவோம்
காட்டிக் கொடுக்கும் சில கருணாக்கள்
நம்மிடையே வாழ்வதனால் வீழ்ந்திட்டோம்

எங்கள் குலக் கொழுந்தைக் கொன்ற
கோழைகளே மாபாவிகளே காடையர்காள்
வாழவிட்டால் வளர்ந்தே வந்திடுவான்
வரிப்புலியாய் மீண்டும் புறப்படுவான் 
என்றெண்ணி அஞ்சிக் கொன்றோரே

கணவனைப் போரினிலே பறி கொடுத்த 
மனைவியர் தன்பிள்ளை சிறுவனே
ஆனாலும் தலைவாரிப் பூச்சுடிக்
கையில் வேல்கொடுத்துச் செருக்களம் 
சென்றுவா மகனே என்றனுப்பிய
வீரமடா எங்கள் வீரம்

நோயுற்றே சிறார் தான் இறந்தாலும்
மாரில் வாள்கொண்டு கீறியே
மண்ணில் புதைத்த தோர்
மரபடா எங்கள் மரபு

நரவெறி பிடித்த நயவஞ்சகர்களே
எங்கள் பிள்ளையின் எதிர்நின்று
சமர் செய்திருந்தால் உங்களில்
சிலர் தலை கொய்திருப்பான் 
மாவீரன் பிள்ளையென நிறுவிச் செத்திருப்பான்

இனவெறி பிடித்த இறுமாப்புக் கொண்டோரே
எங்கள் அண்ணன் நடாத்திய போர்
முடிந்தாலும் எங்கள் பிள்ளைகள்
தங்கள் முன்னோர் வழிநடப்பர் 

சார்லஸ் துவாரகா பாலச்சந்திரன் காட்டிப்
பிள்ளைகள் வார்த்தெடுப்போம் வளர்த்திடுவோம்
எங்கள் பிள்ளைகள் ஆயிரமாயிரம் 
எங்கள் அண்ணன் பிள்ளைகள்போல் 
உருக்கொண்டு மீண்டும் வருவர்

கருணாக்கள் கருவறுக்க உங்களின் வேரறுக்க 
வீணர்களே பொறுத்திருங்கள்
பதில் சொல்லக் காத்திருங்கள்

- அன்புமதி